இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக காளியின் தோற்றத்தை கவர்ச்சி நடிகையாக சித்தரித்து உக்ரைன் இராணுவ அமைச்சகம் போட்ட டுவிட்டர் பதிவுக்கு இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், இடம்பெற்றுள்ள இரண்டு புகைப்படங்களில், ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு அதன் புகை வானுயர பரவியது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக அந்த புகைப்படத்தை எடிட் செய்து, அதில் இந்தியாவில் காவல் தெய்வமாக மக்களால் கும்பிடப்படும் காளியின் உருவம் கொண்ட புகைப்படத்தை சேர்த்துள்ளனர். அதில் அந்த காளியின் தோற்றத்தை கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ போல் சித்தரித்து உள்ளனர். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகள் அதிகமானதால் இந்த டுவிட்டை உக்ரைன் இராணுவ அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டாலும், இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் இராணுவ அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த சர்ச்சைக்குரிய டுவிட் நீக்கப்பட்டுவிட்டாலும், அதனை சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளதால், சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக அந்த புகைப்படம் பரவி வருகிறது. இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.