அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 1996- 2001 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்வழக்கில், 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவரை சார்ந்தோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுப்பதாக வேலூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனு ஏதையும் தாக்கல் செய்யாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து பொன்முடி மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அமைப்புகள் மிக மோசமான முறையில் விசாரணையை நடத்தி உள்ளதாகவும், இது தொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரும் செப்டம்பர் 7ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை நான் பார்த்ததில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.