Google: 2024ம் ஆண்டுக்கு குட்பை சொல்லிவிட்டு 2025ம் ஆண்டை வெல்கம் செய்ய அனைத்து மக்களும் தயாராகிவிட்டனர். அந்தவகையில், 2024ம் ஆண்டில் கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷியங்களின் பட்டியலை கூகுள் பகிர்ந்துள்ளது. பலதரப்பட்ட தலைப்புகள் மக்களின் ஆர்வத்தைக் கவர்ந்தன, ஆனால் கிரிக்கெட் தான் ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவை அதிகம் தேடப்பட்ட தலைப்புகளாகும்.
சர்வதேச அளவில் எப்போதும் பிரபலமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி Google இன் தேடல் விளக்கப்படங்களில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீசன் உற்சாகம் நிறைந்ததாக காணப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் இது அந்த அணிக்கு மூன்றாவது பட்டம் ஆகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் “தேர்தல் முடிவுகள் 2024” ஆகியவை மூன்றாவது மற்றும் நான்காவது அதிகம் தேடப்பட்ட சொற்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 2024 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார். ஒலிம்பிக் எப்போதும் உற்சாகமானது. இந்த ஆண்டு, பிரான்சில் நடந்த ஒலிம்பிக் தொடரும் விதிவிலக்கல்ல. இதுவும் கூகுள் தேடலில் இடம்பெற்றிருக்கிறது.
2024 கோடையில் இந்தியா கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக வட இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இந்திய தொழிலதிபர் மற்றும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, அக்டோபர் 2024 இல் தனது 86 வயதில் காலமானதை அடுத்து பரவலாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் கூகுளில் ஒரு முக்கிய தேடலாகும். இந்திய தேசிய காங்கிரஸ் 8 வது இடத்திலும், புரோ கபடி லீக் 9 வது இடத்திலும், இந்தியன் சூப்பர் லீக் 10 வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஆண்டு, இந்தியர்கள் பெரும்பாலும் “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்,” “தவைஃப்,” மற்றும் “டெமுரே” ஆகியவற்றின் அர்த்தங்களைத் தேடினர். தேடுபொறியும் இவற்றை பல்வேறு வகைகளாக ஒழுங்குபடுத்தியுள்ளது. கடைசியாக, பலர் சமையல் குறிப்புகளைத் தேடினர், குறிப்பாக மாங்காய் ஊறுகாய், கஞ்சி, சரணாமிர்தம், கொத்தமல்லி பஞ்சிரி உள்ளிட்டவைகள் குறித்து தேடியுள்ளனர்.