கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் 2018 – 2019 காலகட்டத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரின் மூத்த மகள், மாமியார் வீட்டில் வளர்த்துள்ளார். இதற்கிடையே, சிசுபாலன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணும், இளைய மகளும், சிசுபாலனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அப்போது கள்ளக்காதலன் சிசுபாலன், அந்த பெண்ணின் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து அழுதுகொண்டே அந்த சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த தாய் இந்த விவகாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மேலும், தாயின் கண்முன்னே அந்தச் சிறுமியை சிசுபாலன், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்நிலையில், அந்த பெண்ணின் 11 வயது மூத்த மகள், தாயைப் பார்ப்பதற்கு வந்துள்ளார். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை 7 வயது சிறுமி அக்காவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பித்து பாட்டி வீட்டுக்குச் சென்று, நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, 7 வயதில் தானும் அம்மாவுக்கு நெருக்கமான ஒருவரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானேன். அதை அம்மாவிடம் தெரிவித்தேன். ஆனால், அம்மா அதை பொருட்படுத்தவில்லை” என மூத்த மகளும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பாட்டி போலீசில் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரேகா, “தன் கண்முன்னே குழந்தைகளின் வாழ்வை இவ்வளவு கொடூரமாகச் சிதைத்த இந்தப் பெண் தாய்மைக்கு அவமானம். மன்னிப்புக்குத் தகுதியற்றவர். அவருக்கு அதிகபட்ச தண்டனையாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ20,000 அபராதமும் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.விஜய் மோகன் கூறுகையில் “இந்த வழக்கின் விசாரணையின்போது, முதல் குற்றவாளியான சிசுபாலன் தற்கொலை செய்துகொண்டார். எனவே, சிறுமிகளின் அம்மா மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மற்றொரு குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை. குழந்தைகள், தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.