மத்திய அரசின் நலத்திட்டங்கள், ஆவணங்கள் மற்றும் அழைப்பிதழ்களில், விரைவில், ‘பாரத்’ என்ற பெயர் தோன்றலாம்’ என, மத்திய அரசின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம், ‘ஜி – 20’ நாடுகளின் உச்சி மாநாடு, பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில், ‘தி பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என்பதற்கு பதில், ‘தி பிரசிடென்ட் ஆப் பாரத்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போல், பிரதமர் மோடியின் இந்தோனேஷியா சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலிலும், ‘தி பிரைம் மினிஸ்டர் ஆப் பாரத்’ என, அச்சிடப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, ‘இண்டியா’ என பெயரிடப்பட்டுள்ளதால், நாட்டின் பெயரை, ‘பாரத்’ என, மத்திய பா.ஜ., அரசு மாற்ற முயற்சிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் இது தொடர்பாக, மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: அரசியலமைப்பு சட்டப்படி, ‘இந்தியா, பாரத்’ ஆகிய பெயர்கள் சட்டப்பூர்வமாக செல்லு படியாகும் என்பதால், அதிகாரப்பூர்வ ஆவணங்களில், ‘பாரத்’ பெயரை பயன்படுத்துவதில் சட்ட ரீதியாக பிரச்னை இல்லை.
நம் நாட்டின் பாஸ்போர்ட்டில் கூட, ‘ரிபப்ளிக் ஆப் இந்தியா’ என்றும், ‘பாரத் சர்க்கார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், அரசியலமைப்பு புனிதத்தை மீறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், பின்னோக்கிய மனநிலையும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்திய தண்டனை சட்டங்களின் பெயர்கள் கூட, ‘பாரத்’ என்ற பெயரில் மாற்றப்பட்டன. மேலும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில், ‘பாரத்’ என்ற பெயர் உள்ளது.
அதனால், ‘பாரத்’ என்ற பெயர், மத்திய அரசின் நலத்திட்டங்கள், ஆவணங்கள், அழைப்பிதழ்களில் விரைவில் பயன்படுத்தப்படலாம். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் காரணமாக, ‘பாரத்’ என குறிப்பிடுவதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. நாட்டின் பெயரை, ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்ற பேச்சு, நீண்ட காலத்துக்கு முன்னே துவங்கியது என்று அவர் கூறினார்.