எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என எல்பிஜி லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், 2025 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்டன.
அந்த புதிய விதிகளின்படி, ”இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் மாற்று ஓட்டுனர் அல்லது கிளீனர்கள் இல்லாதபட்சத்தில் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சிறு விபத்து ஏற்பட்டால் கூட சம்பந்தப்பட்ட லாரி 3 ஆண்டுகளுக்கு டெண்டரில் பங்கேற்க முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. இந்த புதிய விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என எல்பிஜி லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எல்பிஜி டேங்கர் லாரிகளை எண்ணெய் நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவது தொடர்பான புதிய விதிமுறைகளை தளர்த்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல எல்பிஜி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தர்ராஜன், முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படாததால் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். அவர் பேசுகையில், ”அபராதமே இல்லாமல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறோம்.
ஆனால், தற்போது திடீரென அபராதம் போடுவது நிச்சயமாக ஏற்புடையதல்ல. பணம் என்பதை விட பொதுமக்கள் பாதிப்பு என்பதெல்லாம் ஒரு பெரிய இழப்பு. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிச்சயமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். நாங்கள் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து அரசாங்கத்திடமும், தமிழக முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை கொண்டு சென்று பெட்ரோலியம் அமைச்சரிடம் இதை கொண்டு சென்று எங்களுடைய பிரச்சனையை நீங்கள் சமூகமாக தீர்த்து வையுங்கள் என்று கோரிக்கை வைக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.