பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீஸ் அவரை தேனியில் வைத்து மே 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கருக்கு குண்டர் சட்டத்திலும், கரூர் பண மோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக அவர் இன்னும் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கின் விசாரணை கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.