Mini Tidel Park: தமிழகத்தில் தற்போது சேலம், விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை அமல்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது விழுப்புரம், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைட்டில் பார்க்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நகங்களிலும் மினி டைட்டில் பார்க் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மட்டுமே அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக கோவை, மதுரை மற்றும் திருச்சியில் மட்டுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக நெல்லை தென்காசியில் ஜோஹோவின் ஒரு அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை தேடி ஐடி நிறுவனங்களின் மையமாக விளங்கும் பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் இதனை மாற்றும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
அந்த வகையில் தற்போது சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள மதுரை மாட்டுத்தாவணியில் மிகப்பெரிய அளவில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், தற்போது அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்ட மற்றும் வளர்ந்து வரும் முக்கிய நகரங்களாக இருக்கும் கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகளையும் துவங்கியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது இளைஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.