Google: கூகுள் நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட மேலிட பதவிகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின்னர் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று. கடந்த ஆண்டு கூட ஆயிரக்கணக்கான (சுமார் 12,000 பேர்) ஊழியர்களை பணியிலிருந்து கூகுள் நீக்கி இருந்தது. அந்நிறுவனத்தில் சுமார் 1.82 லட்சம் பேர் பணியாற்றி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கூகுளில் நிர்வாக ரீதியாக பல துறைகளில் இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, கூகுள் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் குறிப்பாக OpenAI இலிருந்து வளர்ந்து வரும் போட்டியை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தங்கள் நிறுவன செயல்பாட்டை செம்மைப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், டெக் துறையில் நிலவி வரும் ஏஐ சார்ந்த நுட்பம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுந்தர் பிச்சை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் சார்ந்து முதலீடுகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
Readmore: தோசைக்கல் இருந்தால் போதும்.. சுலபமாக பூண்டு தோலை உரித்து விடலாம்.. எப்படி தெரியுமா?