பொருளாதார சரிவை சந்தித்து வருவதால் மேலும் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக கூகுள், ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கடந்த 10 மாதங்களில் லட்சக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. குறிப்பாக மெட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தது. இந்நிலையில்தற்போது மீண்டும் 10,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து வாட்ஸப், இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் மெட்டா சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்களில் உள்ள 10,000 ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், மெட்டாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், பணிநீக்கம் செய்யப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்ற துரதிர்ஷ்டவசமான செய்தியுடன் காலை எழுந்தேன். உங்களுக்கு ஏதேனும் தொழில் வாய்ப்புகள் இருந்தால், தயங்காமல் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! கடந்த 3 ஆண்டுகளாக OpEx & headcount org செயல்திறனை அதிகரிப்பதில் நான் கவனம் செலுத்தி வந்தேன்,” என்று Facebook நிறுவனத்தில் வணிக திட்ட மேலாளர் தெரசா ஜிமெனெஸ் பதிவிட்டுள்ளார்.
Meta இந்த வாரம் மட்டும் குறைந்த பட்சம் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நிறுவனம் வரும் மாதங்களில் 10,000 வேலைகள் குறைக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.