தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர், சிசுவின் கால்களை பிடித்து வெளியே இழுத்ததில் அவை கையோடு வந்தன. இதில் சிசு பரிதாபமாக இறந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா. இவர் சென்னை தியாகராயநகரில் தங்கி ஓராண்டாக தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன் வினிஷா கர்ப்பமான நிலையில், அவருக்கு சமீபத்தில் அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தானொரு செவிலியர் என்பதால் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அதன்படி குளியலறைக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சுயமாக பிரசவம் பார்ப்பது அத்தனை எளிதல்ல என்பதை அவர் தாமதமாகவே புரிந்து கொண்டார். அதற்குள் அவரது பிரசவம் விபரீதமானது.
பிரசவ வலியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில், சிசுவை வெளியே இழுக்க முயற்சித்தார். இதில் கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து வலிய இழுத்தார். இந்த முயற்சியில் சிசுவின் கால்கள் பிய்த்துக்கொண்டு தனியே வர, குழந்தையும் இறந்தே பிறந்தது. பின்னர் குழந்தையின் கால்களை கழிவறையில் வீசிவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
குழந்தையின் உடலை மருத்துவர்கள் பத்திரப்படுத்திய நிலையில், வினிஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி தியாகராயநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்