தனி நபரின் நிலத்தை பஞ்சமி நிலமாக மாற்றிய உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர், தாத்தா பெயரில் கடந்த 1923ஆம் ஆண்டு சின்னசேலத்தில் உள்ள போசப்பாடி கிராமத்தி பல நபர்களிடம் இருந்து நிலத்தை வாங்கியுள்ளார். பின்னர், தாத்தாவின் பெயரில் இருந்த நிலத்தை, அவரின் பேரன் தங்கராஜ் பெயருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கிரய பத்திரம் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த நிலங்கள் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் எனக் கூறி இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கள்ளக்குறிச்சி வட்டார வருவாய் அதிகாரி, தங்கராஜ்க்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, தங்கராஜ், மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை, சின்ன சேலத்தை சேர்ந்த தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, கடந்த 2021ஆம் ஆண்டு தங்கராஜின் நிலத்தை பஞ்சமி நிலம் என அறிவித்து, அவரின் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து தங்கராஜ் தொடர்ந்த வழக்கில், மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்த போது, பஞ்சமி நிலம் எனக்கூறி தங்கராஜின் பட்டாவை ரத்து செய்த உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனை எதிர்த்தும், தன் நிலத்தை மீட்டு தன்னிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், பஞ்சமி நிலம் என அறிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.