கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளில் புரண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த தொடங்கியதோ அப்போது முதலே கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினர்.
இதனால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்தோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களில் மிக மோசமாக நஷ்டமடைந்து வருகின்றனர். இதற்கிடையே கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளைச் சம்பாதித்த அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக இவர் மாயமான நிலையில், கடந்த புதன்கிழமை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகே ஒரு சூட்கேஸில் அல்கபாவின் உடல் பாகங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தான் முதலில் இந்த சூட்கேஸை கவனித்துள்ளனர். அதை ஆர்வ மிகுதியில் அவர்கள் திறந்த நிலையில், உள்ளே முழுக்க உடல் உறுப்புகள் இருந்துள்ளன. இதனால் அச்சமடைந்த அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் பின்னரே இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது ஒரு கை அருகில் இருந்த ஒரு நீர்நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது கொலை செய்யப்பட்ட பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் மாயமாகியிருந்தார். தனித்தனியாக இருந்த தலை மற்றும் உடல் பகுதியை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது உடல் உறுப்புகள் மிகக் கச்சிதமாகத் துண்டிக்கப்பட்டு இருப்பதால் நிச்சயம் இதையே வேலையாக வைத்திருக்கும் ஒருவரே இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.