தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் நேற்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பேசிய விஜய், ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பா சொன்ன போதாது. செயலிலும், ஆட்சியிலும் காட்டணும் என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல், மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே..!! உங்கள் பெயரை சொல்ல எங்களுக்கு பயமா? தமிழ்நாடு என்றால் உங்களுக்கு ஏன் ஜி அலர்ஜி..? தமிழ்நாட்டுடன் மட்டும் விளையாடாதீர்கள் பிரதமர் சார்.. பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழகம்” என்று கடுமையாக விமர்சித்தார். கடைசியில், அடுத்தாண்டு தமிழ்நாடு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும் என்றும் தவெக – திமுக இடையேதான் போட்டி இருக்கும் என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட புகழும் அளவுக்கு அதிமுக தலைவர்கள் வாழ்ந்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.