மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் கட்டண பில் தொடர்பான தகராறில், மின் வாரிய பெண் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் போட் (33). இவர், வழக்கமாக செலுத்தும் மின் கட்டணத்திலிருந்து கூடுதல் கட்டணமாக ரூ. 570 மின்கட்டண பில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனக்கு மின் கட்டணம் கூடுதலாக வந்திருப்பது குறித்து அபிஜித் போட், பாரமதி தாலுகா, மோர்கான் பகுதியில் மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட் (எம்எஸ்இடிசிஎல்) அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.
ஆனால், அவரது புகாரின்பேரில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அபிஜித் போட், கடந்த புதன்கிழமை அன்று சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரான ரிங்கு திட் (26) என்பவரிடம் தகறாரில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அபிஜித் போட், ரிங்கு திட்டுவை கூர்மையான ஆயுதத்தை கொண்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரிங்கு திட்டை, சக ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, ரிங்கு திட்டுவை கொலை செய்த அபிஜித் போட்டை புனே போலீஸார் கைது செய்தனர். கூடுதல் மின் கட்டண விவகாரத்தில் மின் வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது