செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் மீது 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக லோகேஷ் என்பவர் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகொலை செய்யப்பட்ட லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட லோகேஷ் மீது தாம்பரம், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.