கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல், விமானம் ஒன்று அரை மணி நேரமாக வட்டமடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை சாலையில் வாகனங்களே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியது. அந்த வகையில், கோவையில் இன்று (பிப்ரவரி 07) காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டது. மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம், பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்தது. பின்னர், அரை மணி நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டு பின்னர் தரையிறங்கியது.
அதேபோல டெல்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. சென்னையிலும் பனி மூட்டம் நிலவுவதால், சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள், விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.