சென்னை கோம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 14ஆம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அவரிடம் சண்டையிட்ட போது உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொள் என்று கூறிவிட்டு தான் போலீஸ் எனக்கூறி மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே ரயிலில் இருந்து தப்பித்துச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். புகார் தொடர்பாக ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாகரன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.