வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம் அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்ம சமூகத்தை உருவாக்க நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.
நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. இதற்கான மாற்றம் தனிமனிதர்களில் தொடங்கி, சமூகத்தின் ஒட்டுமொத்த எண்ணமாக வெளிப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றை கடந்து நூறு, இருநூறு ஆண்டுகளாக நாம் அடைந்துள்ள வளர்ச்சியும், வெற்றியும் கொஞ்சம்தான். நாம் ஓயாமல் உழைக்க வேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது என நம்புகிறேன்.
எதிரிகளையும், எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொண்டாலே, தடைகளை உடைப்பது எளிதாகிவிடும். நம்முடைய உழைப்பால், சமூகத்தில் எஞ்சியுள்ள அந்தக் கொடுமைகளையும் நிச்சயம் களையெடுப்போம். சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை நாம் சாத்தியப்படுத்தி ஆக வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்..! ஜெய் பீம்..!” என்று பேசினார்.
Read More : அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்..!! சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்..!!