கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், மக்கள் எப்போதும் போல ஆர்வத்துடன் வாக்களித்த போதிலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகியுள்ளது. யஷ்வந்த்பூர் தொகுதியில் அதிகபட்ச வாக்கு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், பல்லாரி தொகுதியில் குர்லகிண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு 23 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். வாக்களிக்க வந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு வாக்குச் சாவடியிலேயே குழந்தை பிறந்துள்ளது. வாக்குச்சாவடியில் இருந்த பெண் வாக்காளர்களும், பெண் அதிகாரிகளும் அந்த பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்துள்ளனர்.