Chad presidential: ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் அதிபரின் பாதுகாவலர் உட்பட 19 பேர் பலியாகினர்.
மத்திய ஆபிரிக்க நாடான சாட் நாட்டுல் இன்னும் 2 வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நாட்டின் தலைநகர் நிட்ஜமேனாவில் உள்ள அதிபர் மாளிகளை துப்பாக்கி ஏந்தியவர்கள் நேற்று முன் தினம் இரவு திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தாக்குதலில் அதிபரின் பாதுகாவலர் உட்பட 19 பேர் பலியாகினர். மாளிகையில் அதிபர் இருக்கும்போதே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அதிபர் டெபி இட்னோ உயிர் தப்பினார். மேலும் இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள், மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியிலிருந்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த தாக்குதலை ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பான போக்கோ ஹராம் நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு இதை முழுமையாக மறுத்துள்ளது. இதுகுறித்து, வெளியுறவு அமைச்சர் அப்டெராமன் கௌலமல்லா கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைநகர் நிட்ஜமேனாவைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் என்பதால், இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்றது ஆப்பிரிக்க நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.