சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடனான சந்திப்புக்குப் பிறகு, சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக அமைச்சகம் கருதுகிறது. இந்தியாவின் வருடாந்திர சமையல் எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட 13-14 மில்லியன் டன் (MT) ஆகும். இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து சுமார் 8 மில்லியன் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே சமயம் சோயா மற்றும் சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் அர்ஜென்டினா, பிரேசில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியா தனது வருடாந்திர சமையல் எண்ணெய் தேவையை 56% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. மே மாதத்தில் இருந்து, பாமாயிலின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய பிறகு, பாமாயிலின் விலை குறைந்து வருகிறது. பல்வேறு வகையான சமையல் எண்ணெய்களின் விலை ஏற்கனவே லிட்டருக்கு 30-40 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும், லிட்டருக்கு 8-10 ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளதாக சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.