எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி செல்கிறது. அதேபோல, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படியான சூழலில், காய்கறி விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், ஹோட்டல் உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதனால், ஓட்டல் பொருட்களின் விலையும் உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, மின் கட்டணத்துக்காக 40 சதவீதம் அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பும் ஹோட்டல் உரிமையாளர்கள், வணிக சிலிண்டர்களின் விலை 7 ரூபாய் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். காய்கறி, கரண்ட்பில், கேஸ்விலை, மளிகை பொருட்கள் விலை என அனைத்தும் சேர்ந்து சமையல் செய்வதற்கான செலவை அதிகப்படுத்துவிட்டதாக கலங்கி சொல்கிறார்கள். 1,500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவையாக உள்ளது. ஆனால், இப்போதைய விலை உயர்வால் மாதத்துக்கு 2,500 ரூபாய் வரை சமையல் செலவாகிறது.
இது தொடர்பாக சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், ஓட்டல் உரிமையாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். காய்கறி விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல் தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். இப்போது மதிய சாப்பாட்டின் விலை 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் இருக்கிறது. காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இதே விலைக்கு சாப்பாட்டை கொடுக்க முடியுமா? என தெரியவில்லை. அதே நேரத்தில், பொதுமக்களின் தலையில் இந்த விலை உயர்வை சுமத்தவும் நாங்கள் தயாராக இல்லை. விலைவாசி குறையுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்” என்றார்.