”தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்” என அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”மாணவர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வளம் பெற்று நலமோடு வாழ, ’நான் முதல்வன் திட்டம்’ மூலமாக பல்வேறு சாதனைகளை உயர்கல்வித் துறையில் செய்துள்ளார் முதலமைச்சர். வேலை தேடுவோராக இன்றி, வேலை தருவோராக மாற வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. பட்டம் பெறும் அனைவரும் தொழில் முனைவோராக வர வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம்.

இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர். அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம். பதக்கம் பெறும் 69 பேரிலும் 39 பேர் பெண்கள். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தவர் முதலமைச்சர். இந்தியாவிலேயே இதுவே முதன்முறை. உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்திட்டம் என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘பொறியியல் நுழைவுத் தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்ததால், அதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5% இட ஒதுக்கீடையும் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.