வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு என சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; வேலூர் மத்தியசிறை உட்பட தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எவ்வித சிரமுமின்றி தங்கள் மத வழிபாட்டைத் தொடரும் வகையில் சமமான மத வழிப்பாட்டு உரிமையை பெற்றுள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் சிறை விதிகளின்படி ஏற்கனவே நடைமுறையிலுள்ள வழக்கத்தின்படியும் எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக இயங்கி வருகின்றன. சிறை வளாகங்களில் அமைந்துள்ள இவ்வழிபாட்டுத் தலங்களுக்கு சிறைவாசிகள் சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நடைமுறை மத்தியசிறை வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து சிறைகளிலும் பின்பற்றப்படுகிறது.
நடப்பாண்டு உட்பட ஒவ்வொரு ஆண்டும் புனித ரம்ஜான் மாதத்தில் வேலுார் மத்தியசிறை, உயர்பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் சிறைவாசியினரும் தங்கள் தொகுதிகளில் நோன்பு கடைபிடிக்கவும் தொழுகை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(6)-ன் படி ரமலான் காலத்தில், நோன்பிருக்கும் முஸ்லீம் சிறைவாசிகள் தங்களுக்கான உணவை தனியாக சமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், தொழுகையின் போது தேவைப்படும் பாய்கள் மற்றும் தண்ணீர் போன்றவை தேவையான அளவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இருப்பினும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(4)-ன் படி பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளானாலும் மதவழிபாடு அல்லது மதச்சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பெரிய அளவில் கூட்டம் கூடுவது அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, அனைத்து மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளும் தங்களது மத வழிபாடு மற்றும் மதச் சடங்குகளை நிறைவேற்றிட சிறைத்துறையின் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் சிறைவிதிகளுக்குட்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, சிறைவாசிகள் சமய உரிமைகள் மீறப்படுவதாக செய்தி ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்ற விஷமத்தனமான ஒன்று எஎ தெரிவிக்கப்பட்டுள்ளது.