நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்தவர் பைக் மெக்கானிக் சிவக்குமார். இவர் வாகன திருட்டு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவக்குமாரின் மனைவி சிறையில் உள்ள கணவரைப் பார்க்க செப்.25ஆம் தேதி சேலம் மத்திய சிறைக்கு சென்றுள்ளார். அப்போது சிறையில் மனு பதிவு செய்யும் இடத்தில் இருந்த சிறைக்காவலர் விஜயகாந்த் என்பவர் அவரது செல்போன் எண்ணை குறித்து வைத்துக்கொண்டுள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். சிறைக்காவலரின் இந்த அத்துமீறிய பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் மற்றொரு முறை சிறையில் கணவரைச் சந்தித்தபோது இதுபற்றிக் கூறியுள்ளார். சிவக்குமார் இதை தன்னுடன் சிறையில் இருக்கும் மற்றொரு கைதியான தனபாலிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், தனபால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிறைத்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் சிறைக்காவலர் விஜயகாந்த் பற்றி புகார் அளித்திருக்கிறார். ஆனால், அவர்கள் புகாரை கண்டுகொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி குற்றம்சாட்டப்படும் சிறைக்காவலரை அனுசரித்துப் போகுமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.
இதனால் அதிருப்தி அடைந்த சிவக்குமாரின் மனைவியும், தனபாலும் நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று, சிறைக்காவலர் விஜயகாந்த் மீதும், அவர் பற்றிய புகாரை கவனித்து நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.