கோவை மாவட்டம் மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், அம்முகுட்டி தம்பதியரின் மகன் சஞ்சய் (20). இவர், பேரூர் தமிழ் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பிகாம் பயின்று வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் கருப்புசாமி என்பவரின் மகள் ரமணி. சஞ்சய்யும் ரமணியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் மத்துவராயபுரம் பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் சஞ்சய்யின் பெற்றோருடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சஞ்சய் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் சஞ்சய்க்கும் ரமணிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 29ஆம் தேதியும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், சஞ்சய் ரமணியை அடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும், ரமணியின் கழுத்தை பிடித்து நசுக்கி, துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை மறைப்பதற்காக தனது பெற்றோரை துணைக்கு அழைத்துக் கொண்ட சஞ்சய், ரமணியின் ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து உடைகளை மாற்றி விட்டுள்ளார். மேலும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக சாணி பவுடர் குடித்து உயிரிழந்தது போல் குடும்பமே நாடகமாடியுள்ளனர். பிறகு ஆலந்துறை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ரமணியின் உடலை தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு ரமணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காருண்யா நகர் போலீசார், மருத்துவமனையில் இருந்த உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து, தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணியின் தந்தை கருப்புசாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சஞ்சய் மற்றும் அவரது பெற்றோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சஞ்சய் ரமணியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக சஞ்சயும் அவரது பெற்றோரும் சேர்ந்து நாடகமாடியதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய போலீசார், மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.