சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே, குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் மின்சார ரயிலுக்கான உத்தேச அட்டவணை வெளியாகியிருக்கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் வழித்தடம், மிகவும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக இந்த வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குளிர்சாதனை பெட்டி வசதியுடன் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் இயக்கப்பட்டால், புறநகர் ரயில் சேவையில், முதல் ஏசி ரயில் என்ற பெருமையைப் பெறும். 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும், மொத்தமாக ஐந்தாயிரம் பேர் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஏ.சி. மின்சார ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் இடையே இருந்து வரும் சத்தத்திற்கு ஏற்ப ஒலிபெருக்கியின் சத்தம் தானாக அதிகரிக்கும் வகையில் இருக்கிறது. இதன் மூலம் ரயிலில் வரக்கூடிய அனைத்து தகவல்களையும் பயணிகள் மிகவும் எளிதாக கேட்கலாம். முதல் மற்றும் கடைசி பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் பெட்டிகளை போல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ரயிலில் பயணிகள் படிக்கட்டில் நின்று பயணிக்க இயலாது. விபத்துகளை தடுப்பதற்காக ‘கவாச்’ தொழில்நுட்பமும் இந்த ரயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ரயில் கட்டணம் : கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லவே 70 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என் தகவல்கள் பரவுகின்றன.ஆனால் கட்டணம் குறித்து தெற்கு ரயில்வே முறைப்படி அறிவிக்கும்.. அதன்பிறகே கட்டணம் குறித்து தெரியவரும். அதேநேரம் ஏசி மின்சார ரயில் கட்டணம், மெட்ரோ கட்டணத்தைவிட அதிகமாக இருக்குமா என்ற அச்சமும் உள்ளது.
எந்தெந்த ரயில் நிலையங்களில் இருக்கும்? இந்த குளிரூட்டப்பட்ட ரயில் பிரதான வழித்தடத்தில் செல்லும்போது, செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை பூங்கா, சென்னை கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணை : சென்னை ஏ.சி ரயில்கள் அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு, காலை 7 மணி, பகல் 3.45 மணி, இரவு 7.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45க்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்றும் தெரிகிறது. அதேபோன்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.