ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் செய்து குறிப்பில்; இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும் என்பதால், எந்த வாகனம் ஓட்டும்பொழுதும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவோருக்கும், ஹெல்மெட் அணியாது இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூ.1,000 அபராதம் மட்டுமன்றி 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
செல்போனில் பேசாமல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வாகன விபத்தினை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்போம். புதுச்சேரியில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இச்சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் வரை சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும்.
மேலும், வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் தகுதி ரத்து, சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் தகுதியான ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது, இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லாமல் சாலை விபத்துகளை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.