ரயில்களில் பெண்களின்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணியை கீழே தள்ளிய சம்பவம், அதேபோல் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசாரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறான சம்பவங்களால், ரயிலில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்படும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பின்னர் புறப்படும் ரயில்களில் ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும், குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, புதிய வாட்ஸ் ஆப் குழுவை சென்னை வேப்பேரியில் ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் அறிமுகப்படுத்தினார்.
பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய, இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவி, பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.