தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடசென்னையில் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கடலூர் மாவட்டம், நெய்வேலி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதேபோல, விழுப்புரத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் அரை மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ததால், குளுமையான சூழல் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.