Zelensky: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் வைத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜெலன்ஸ்கி ஆவேசமாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் வரை உக்ரைனுக்கு போகும் அனைத்து உதவிகளையும் நிறுத்த டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், ஜெலன்ஸ்கி இப்போது திடீரென தனது டோனை மாற்றியிருக்கிறார். நாட்டில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும், விரைவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அவர் மேலும், “நாங்கள் யாருமே தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த போரை விரும்பவில்லை. உக்ரைன் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக உள்ளது. இங்கு உக்ரைன் மக்களை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. உக்ரைனில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர அதிபர் டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நானும் எனது குழுவும் தயாராக இருக்கிறோம்.
போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் விரைவாகச் செயல்படத் தயார். முதற்கட்டமாகக் கைதிகளை விடுவிப்பது, விமானத் தாக்குதல்களை நிறுத்துவது, ஏவுகணைகள், நீண்ட தூர டிரோன்களை பயன்படுத்தத் தடை, எரிசக்தி மற்றும் சிவிலியன் கட்டிடங்கள் மீதான தாக்குதல், கடல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றை நிறுத்த நாங்கள் தயார். ரஷ்யாவும் இதை ஒப்புக்கொண்டால் உடனே கூட போர் நிறுத்தம் செய்யலாம். தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களிலும் வேகமான முடிவுகள் தேவை. அமெரிக்காவுடன் இணைந்து ஒரு சரியான தீர்வை கண்டறிய நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடன் நடந்த மீட்டிங் குறித்து ஜெலன்ஸ்கி, “வெள்ளை மாளிகையில் நடந்த எங்கள் சந்திப்பு, திட்டமிட்டபடி நடக்கவில்லை. இது சரியாக நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது. இப்போது செய்ய வேண்டிய விஷயங்களை நாம் சரியாகச் செய்ய வேண்டிய நேரம். வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார். “உக்ரைன் எந்த நேரத்திலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்யும் ஒரு படியாகவே நாங்கள் அதைப் பார்க்கிறோம். அது எங்களுக்கு பலன் தரும் என நம்புகிறோம்” என்றார்.