இந்தியர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகவே முதலில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, இட ஒதுக்கீட்டைக் குறைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனால், சற்று போராட்டம் ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
இதனால் பல இடங்களில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறைக்கு எதிராக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை. இட ஒதுக்கீடு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வந்த போதிலும், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்கள் கையை மீறிச் செல்லும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க நேற்றிரவு முதல் அங்கே ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மாணவர் போராட்டத்தை ஒடுக்க போலீசார் இதுபோல மொத்தமாக ஊரடங்கை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே, இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே வங்கதேசத்தில் இருப்போர் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், ”தற்போது அங்கே இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்துக்குப் பயணம் செய்ய வேண்டாம். வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி, வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். எதாவது அவசரம் என்றால் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டாக்காவில் உள்ள இந்தியர்கள் +8801958383679, +8801958383680, +8801937400591 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.