கன்னியாகுமரி மாவட்டம் தேரியான்விளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் முகேஷ் (19). இவர், நாகர்கோவிலில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்தார். அண்மைக் காலமாக முகேஷின் நடவடிக்கை பெற்றோருக்கு பிடிக்கவில்லை. தினமும் வீட்டில் இருந்து சீருடை, புத்தகப்பையுடன் புறப்படும் முகேஷ், கல்லூரிக்குத் செல்வதில்லை. அங்கிருந்து நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருவது அவரின் தந்தை குமாருக்குத் தெரியவந்தது. இது தொடர் கதையானதால் பெற்றோர் மாணவனிடம் இதுகுறித்து கேட்டனர். எனினும், அவர் பதில் கூறாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கல்லூரிக்குச் செல்லாமல் கட் அடித்தது ஏன்?. படிக்க விருப்பம் இல்லை என்றால் ஒரு வேலைக்குச் செல் என குமார் முகேஷை கடுமையாகத் திட்டினார். இதனால் மனம் உடைந்த முகேஷ், வீட்டில் தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதில் அவர் வாந்தி எடுக்கவே, அக்கம் பக்கத்தினர் முகேஷை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கல்லூரி மாணவன் முகேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு கட் அடித்ததை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.