புதுமணப்பெண் கணவரால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டையை சேர்ந்தவர்கள் தமிழரசன் – ரேவதி தம்பதி. இருவருமே, தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் புவனேஸ்வரி (20). இவரும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சபரி (23) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதியும், தமிழரசன் – ரேவதி வேலை பார்க்கும் செங்கல் சூளையிலேயே, ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு இவர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, புவனேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கணவர் சபரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்தார்கள் புவனேஸ்வரியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அய்யம்பேட்டை காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரை உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், இளம்பெண் கொலை செய்யப்பதற்கான காரணம் தெரியவில்லை. கணவர் தப்பியோடிவிட்டதால், அவர் பிடிபட்ட பிறகே உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வரும். இதற்கிடையே, குடிசை வீட்டில் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களையும் சேகரித்துள்ளனர்.