ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் முறையாக தலை சீவி, ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், நேற்று அரசுப் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி, ஜடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வந்துள்ளனர்.
அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியை, மாணவிகளின் கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். பின்னர், தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்து, அந்த 8 மாணவிகளையும் வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார். இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல் கேலி செய்தனர்.
இதனால் அவமானம் அடைந்த மாணவிகள், வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்தனர். தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.