நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட கிராமம் வையகவுண்டன் பட்டி. இந்தக் கிராமத்தின் வழியே இடிந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பள்ளி ஒன்றின் முன்பாக மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்ததோடு சபாநாயகர் அப்பாவு காரை நோக்கி நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிய சபாநாயகர் மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார்.
அப்போது தங்களது பள்ளிக்கு முன்னால் அரசுப் பேருந்துகள் நிற்பதில்லை என்றும் தள்ளி இறக்கிவிடுவதாலும், தள்ளி ஏற்றுவதாலும் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும், பள்ளி விடும் நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் இதனால் காத்திருந்து வீடு திரும்ப வேண்டியுள்ளதாகவும் கூறினர். பல நாட்களில் பேருந்து வசதி கூட இல்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஆன் தி ஸ்பாட்டில் மாணவ, மாணவிகள் முன்னிலையிலேயே அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டல மேலாளருக்கு போன் போட்டு பேசிய அப்பாவு, தனக்கே உரிய பாணியில் வறுத்தெடுத்துவிட்டார். இதனால் ஆடிப்போன அதிகாரிகள் அடுத்த சில நிமிடங்களில் வள்ளியூர் – கூத்தங்குழி இடையேயான அரசுப் பேருந்தை அனுப்பி வைத்தனர். அரசுப் பேருந்தில் மாணவ, மாணவிகளை ஏற்றிவிட்டு விட்டு அதன் பிறகு தனது காரில் நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார் சபாநாயகர் அப்பாவு. ராதாபுரம் தொகுதி சபாநாயகர் அப்பாவுவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.