fbpx

விதவைப் பெண் கோயிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்ற மூடநம்பிக்கை துரதிருஷ்டவசமானது!… சென்னை ஐகோர்ட்!

விதவைப் பெண் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் இன்னும் நிலவுவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, கெட்டிசேவியூர் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்த பொங்கியப்பன் கடந்த 2017 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த கோவிலில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆடித்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூசாரி பொங்கியப்பனின் மனைவி தங்கமணி மற்றும் மகனை கோவிலுக்குள் நுழைய அந்த ஊரை சேர்ந்த அய்யாவு என்பவரும், முரளி என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விதவை என்பதால் கோவிலுக்குள் நுழையக் கூடாது என மிரட்டுவதால், திருவிழாவில் கலந்துகொண்டு, கோவிலுக்குள் சென்று, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தங்கமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், விதவை பெண் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் இன்னும் நிலவுவது துரதிருஷ்டவசமானது எனவும், பல சீர்திருத்தவாதிகள் இந்த அர்த்தமற்ற நம்பிக்கைகளை உடைக்க முயன்றாலும், சில கிராமங்களில் அது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ஆண்கள் தங்கள் வசதிக்கேற்ப வகுத்த இந்த கோட்பாடுகள் மற்றும் விதிகளால், கணவனை இழந்ததால் பெண்ணை இழிவுபடுத்துகின்றன எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாகரீக சமுதாயத்தில் இவையெல்லாம் தொடர அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் தங்கமணியும், அவரது மகனும் திருவிழா மற்றும் கடவுள் வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தடுக்க எவருக்கும், எந்த உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மனுதாரரை கோவிலுக்குள் நுழைய விடாமல் யாரேனும் தடுக்கும் முயற்சித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தங்கமணி கோயிலுக்குள் செல்வதை தடுக்கும் அய்யாவு மற்றும் முரளி ஆகியோரை சிறுவலூர் காவல் நிலைய ஆய்வாளர் அழைத்து கோவிலுக்கு வரும் தாய் – மகனையும் தடுக்கக்கூடாது என அறிவுறுத்தும்படி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி வழங்கப்படும் அந்த அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் இருவரும் செயல்பட்டால் சட்டத்திற்குட்பட்டு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவிழா நடக்கக்கூடிய இரு நாட்களிலும் தாயும் மகனும் கலந்து கொள்வதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Kokila

Next Post

விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் தற்போதைய நிலை என்ன...?

Sat Aug 5 , 2023
சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த விண்கலம் தற்போது பூமி சுற்றும் பாதையில் உள்ளது. சந்திரயான்-3 கூறுகளில் நேவிகேஷன் […]

You May Like