செஸ் ஒலிம்பியாட் தொடரில் தாலிபான் கொடி பொறிக்கப்பட்ட பேனர்கள் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தாலிபான்கள், ஆட்சிப்பொறுப்பை தங்களது கைவசத்தில் கொண்டு வந்தனர். மேலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய கொடிக்கு பதிலாக தங்களது கொடியை ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ கொடியாக அறிவித்தனர். இருப்பினும் பல சர்வதேச அரங்குகளில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மூவர்ணக் கொடியே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கருப்பு, சிவப்பு, பச்சை வண்ணங்கள் கொண்ட தேசிய கொடியையே இன்னும் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போட்டி நடைபெறும் அரங்கிற்கு வெளியே தாலிபான்களின் கொடி வைக்கப்பட்டிருப்பது பேசுபொருள் ஆகி உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்குபெற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணியின் செஸ் விளையாட்டு வீரர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கொடியாய் முன்னர் பயன்படுத்தி வந்த மூவர்ண கொடியையே பயன்படுத்தி வருகின்றனர். வீரர்களின் பெயர் பலகை வைக்கப்படும் இடத்திலும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ஆப்கானிஸ்தானின் பழைய மூவர்ணக் கொடியே பயன்படுத்தப்படுகிறது.
மொத்தமாய் ஆப்கானிஸ்தானின் பழைய கொடியே அங்கீகரிக்கப்பட்ட கொடியாக உள்ள நிலையில், தாலிப்பான்கள் கொடியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டு வீரர் ஒருவர் செஸ் ஒலிம்பியாட் அரங்கிற்கு வெளியே நிற்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, போட்டி நடைபெறும் அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரிலும் அனைத்து நாட்டு கொடிகளிலுடன் தாலிபான்களின் கொடி பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அரசின் கவனத்திற்கு சென்றவுடன் தற்போது மறைக்கப்பட்டுள்ளது.