சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 12-வது தெருவில் ஸ்ரீராம்- பானுமதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்ரீராமின் தாயார் சிவகாமி சுந்தரியும் (81) ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி ஸ்ரீராமும், பானுமதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சிவகாமி சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளர். காலையில் பணிக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் மாலை வீடு திரும்பினர். அப்போது அறையில் சிவகாமி சுந்தரி தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து எழுப்பாமல் இருந்தனர். ஆனால், வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அதிலிருந்த பணம், நகைகள் மாயமாகி இருந்தன. உடனடியாக தாயை எழுப்ப முயன்ற போது, அவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில, இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காலை 11 மணியளவில் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. பின்னர், அந்த வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்ததில் கையில் குடை பிடித்த படி ஆசாமி ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பதைத் தொடர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அந்த ஆட்டோ கே.கே. நகர் நோக்கி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் குடை பிடித்து செல்லும் நபரின் படத்தைக் காண்பித்ததும், அந்த நபரை தான் ஆட்டோவில் ஏற்றி வந்ததாக கூறி அந்த ஆசாமியின் வீட்டை அடையாளம் காட்டினார்.
இதனையடுத்து, போலீசார் கொலையாளியைப் பிடித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில், கே.கே.நகரை சேர்ந்த சக்திவேல் (37) என்றும் இன்டீரியர் தொழில் செய்து வந்த தனக்கு போதிய வருமானம் இல்லாததால் வயதான மூதாட்டிகளைக் கொலைச் செய்து நகைகளையும், பணத்தையும் கொள்ளை அடிக்கும் தொழிலில் ஈடுபட்டதாகவும், ஆதம்பாக்கத்தில் தனியாக இருந்த சிவகாமி சுந்தரியை நான் தான் கழுத்தை இறுக்கி கொலைச் செய்து, பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் ஏற்கனவே வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளைத் திட்டமிட்டு கொலைச் செய்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது. கைதானவரிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.