தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியரின் மகன் கிஷோர் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று, டைரி எழுதாமல் வந்ததைக் கண்டித்த ஆசிரியர், கிஷோரை குச்சியால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த கிஷோர் வீட்டிற்கு வந்து ஆசிரியர் அடித்ததை தனது தாய் சாந்தியிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் இதுகுறித்து ஆசிரியரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது என்னை ஒன்னும் பண்ண முடியாது… நீ எங்க வேணாலும் போகலாம்.. என்று ஆசிரியர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவனை அழைத்துச் சென்று திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவல்லங்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.