அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2017-2018-ம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித்தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதிச்சான்றிதழ், பணி அனுபவச்சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022, மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, 15 பாடப்பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்தப் பணித் தேர்விற்கு நேர்காணல் எதுவும் கிடையாது. இந்தப் பணிக்கு போட்டி எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவச் சான்றின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றன. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Also Read: குடியிருப்பு பகுதிகளில் சூரியசக்தி மேற்கூரைக்கு மானியம்… வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்…!