ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இரண்டு நபர்கள் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனை அறிவியல், உயிர் வேதியியல், இந்திய கலாச்சாரம், உடற்கல்வி இயல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணி நாடுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம், ஆளறி சான்றிதழ் படிவம் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு ஆகிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
தங்களது அழைப்பு கடிதம் ஆளறி சான்றிதழ் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அவர்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய சுயசான்றொப்பம் இடப்பட்ட நகல் மற்றும் ஆளறி சான்றிதழ் ஆகியவற்றினை சான்றிதழ் சரிபார்ப்பின் போது கொண்டு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் வருகை தராத விண்ணப்பதாரர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் அடுத்த கட்ட பணி தேர்விற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதால், அவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதால் மட்டுமே வண்ணாரது இறுதி தற்காலிக தேர்வுக்கு உத்தரவாதம் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் சான்றித சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://forms.gle/ZUY2Ud5wxcapDku6 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்கள் அனுப்ப வேண்டும். ஆட்சேபனை மனு மற்றும் பிறவழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.