ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 % முதல் 52% வரை உயர்த்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புக்கு மேல் மின்இணைப்பு இருந்தால், ஒரே இணைப்புக்கு மட்டும்தான் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது. மற்ற இணைப்புகளுக்கு இவை ரத்து செய்யப்படுவதுடன் அந்த மின்இணைப்புக்கான கட்டணமும் பொது பயன்பாட்டுக்கான கட்டணமாக மாற்றப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் 2023, ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.