ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன், சில மணி நேரங்களிலேயே அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த மசோதா உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும் என்றும், உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் சூதாட்டம் நடத்தினால் 3 மாதம் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததால், அவர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. சமீக காலமாக ஆளுநரின் நடவடிக்கைகளில் பிரதமருக்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, ஆளுநரிடம் சரியாக பேசவில்லையாம். மேலும், ஆளுநர் மாளிகையில் தங்குவதையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு விரைவில் ஆளுநர் மாற்றப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.