பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்யுமாறு லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைக்கு உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது
உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, அதன்பேரில் பாலியல் உறவில் ஈடுபட்டு, பிறகு திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கு பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய பெண்ணின் ஜாதகத்தை ஆராயுமாறு லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய பெண்ணின் ஜாதகத்தை ஆராயுமாறு லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.
முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்துக்குச் சென்றார். அப்போது குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், அதனால் தனது கட்சிக்காரர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் வழக்கறிஞர், பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று பதில் வாதத்தை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து மே 23-ம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் தங்களின் ஜாதகத்தை 10 நாள்களுக்குள் லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டதுடன், சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜோதிடவியல்துறை தலைவருக்கு மூன்று வார கால அவகாசமும் வழங்கியது. இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பங்கஜ் மித்தல் அடங்கிய நீதிமன்ற அமர்வு, “ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது ஜோதிடத்துக்குள் நுழைய முடியாது. எனவே இது போன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கக் கூடாது. அதோடு ஜாமீன் மனுவில் ஜோதிட அறிக்கை தேவையில்லை. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை வழக்கின் தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதித்தது.