இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், நாளை போர்க்கால ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், நாளை (மே 7) நாடு முழுவதும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது, எதிர்பாராத தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்பை மதிப்பீடு செய்யும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சைரன்கள் : வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணை தாக்குதல்களுக்கான எச்சரிக்கை சைரன்கள் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு, நொடியில் செயல்படும் வகையில் பரிசோதனை செய்யப்பட உள்ளன.
மக்களுக்கு பாதுகாப்பு பயிற்சி : பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்ட மருத்துவ உதவி, தஞ்சம் அடையும் நடைமுறை, எச்சரிக்கை சின்னங்களை அடையாளம் காணும் பயிற்சி மற்றும் பயமின்றி வெளியேறும் நடைமுறைகள் போன்ற முக்கிய பாதுகாப்பு வழிமுறைகளும் நாளை நடைபெறவுள்ளது.
முக்கிய தளங்களுக்கு பாதுகாப்பு : மின்சார நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைத் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் எதிரிகளின் கண்களில் படாமல் பாதுகாக்க, மறைமுகக் கவசங்கள், ஒளி மற்றும் ஒலி தடுப்புகள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
‘கிராஷ் பிளாக் அவுட்’ நடைமுறை : போரின் போது, எதிரி விமானங்களின் கண்களுக்கு நாட்டின் முக்கிய இடங்கள் தெரியாமல் இருக்க, ஒளி நீக்கம் நடைமுறைகளும் நாளை சோதிக்கப்படுகின்றன.
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட போது, இதேபோல் போர்க்கால ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு முதல் முறையாக தற்போதுதான் மீண்டும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரோஷ்பூரில் கன்டோன்மென்ட் பகுதியில் இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட்டு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகைகள் நடைபெறவுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒத்திகையால் மாணவர்கள் பதற்றத்திற்கு உள்ளாவார்கள் என்பதால், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசு அலுவலகங்களும் நாளை இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.