சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் 18 வயது இளம்பெண்ணை கணவர் 2-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொடுங்குளத்தை சேர்ந்தவர் விஜின்குமார் (36). இவர் ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சந்தியா (34). கருங்கல் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தியா தற்போது முக்காலவிளையில் உள்ள பெற்றோர் வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், 18 வயது இளம்பெண்ணை உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் கடந்த ஜூன் 12ஆம் தேதி விஜின்குமார் திருமணம் கொண்டார். இதனையறிந்த சந்தியா, கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது விஜின்குமார், ‘உன் தகப்பனாரிடம் சொத்து அல்லது ரூ.10 லட்சத்தை வாங்கி வந்து தரும்படி சொல்லியும் நீ கேட்காததால் நான் வேறு திருமணம் செய்துகொண்டேன்’ என்று கூறியுள்ளார். இது பற்றி போலீசில் புகார் கொடுப்பதாக சந்தியா கூறியபோது அவரை ஆபாசமாக திட்டி, கத்தியால் வெட்ட முயன்றார். உயிர் தப்பி ஓடிய சந்தியா, ஆன்லைனில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, விஜின்குமார், 2வது திருமணம் நடத்தி வைத்த ஈத்தவிளையை சேர்ந்த சபை போதகர் பிரின்ஸ், களியலை சேர்ந்த சிவகுமார், கொடுங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.