கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தூக்க மாத்திரை கொடுத்து, பின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பைடி ராஜு. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே ஜோதிக்கும் நூக்கராஜூ என்பவருக்கும் பழக்கம் இருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருப்பதற்காக தனி வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், தனக்கு சிபிஐ அலுவலகத்தில் தூய்மை பணியாளர் வேலை கிடைத்திருப்பதாக கணவரிடம் கூறிவிட்டு, கள்ளக்காதலனுடன் அந்த வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார் ஜோதி. இதற்கிடையே, மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த கணவர் ராஜு, அந்த வாடகை வீட்டிற்கு சென்று கையும் களவுமாக பிடித்தார். இது பெரிய பிரச்சனையாக வெடிக்க… இனிமேல் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று மனைவி ஜோதி உறுதியளித்ததால், மீண்டும் ஒன்றாக வாழ்ந்துள்ளார் கணவர் ராஜு.

ஆனால், கள்ளக்காதலன் உடனான உறவை துண்டிக்க முடியாமல் தவித்த ஜோதி, தனது கணவரின் கதையை முடித்துவிடலாம் என திட்டம் போட்டுள்ளார். அதன்படி, கணவர் ராஜுக்கு விதவிதமாக சமைத்துப் போட்ட ஜோதி, அதில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே கணவர் ராஜு மயங்கி விழுந்தார். பின்னர், கள்ளக்காதலுக்கு ஃபோன் செய்து, அவரை வீட்டிற்கு வரவழைத்து, ராஜுவை இருவரும் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, இருவரும் ஆம்புலன்ஸ்-க்கு ஃபோன் செய்துள்ளனர். பின்னர், அங்கு வந்த ஊழியர்களிடம் தனது கணவர் அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்து விட்டார் என கூறியுள்ளார் ஜோதி. பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்களும் அவர் இறந்துவிட்டார் என கூறிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் ராஜுவின் உடலை ஜோதியும், கள்ளக்காதலன் நூக்கா ராஜுவும் இருசக்கர வாகனத்திலேயே சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
பின்னர், இருவரும் வீட்டிற்கு வந்து இதை கொண்டாடும் விதமாக உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், மறுநாள் தனது கணவரை காணவில்லை என மனைவி ஜோதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளா. போலீசார் விசாரணையில், ஜோதியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் நூக்கா ராஜுவுடன் நீண்ட நேரம் பேசியிருப்பது தெரிந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடத்த ராஜுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.