இந்தாண்டு (2023) மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என அறிக்கைகள் கூறுகின்றன. இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் இருக்கும். அதில் முதல் சூரிய கிரகணம் தான் ஸ்பெஷல் என்று வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அது என்ன ஸ்பெஷல் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதல் கிரகணம்
இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிகழும். இந்து நாட்காட்டியின்படி, சூரிய கிரகணம் காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை தொடரும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது ஒரு முழு சூரிய கிரகணத்தின் உச்சம் சுமார் 7 நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் நீடிக்கலாம் என்று கணித்துள்ளனர். அதிகபட்சமாக 12 நிமிடங்கள் மற்றும் 29 வினாடிகள் கூட நீடிக்கலாம். இதனால், உலகம் 7.32 நிமிடங்கள் இருளில் மூழ்கலாம் என்று கருதுகின்றனர். இந்த சூரிய கிரகணத்தை தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அண்டார்டிக்காவில் உள்ளவர்களால் பார்க்க முடியும். ஆனால், இந்தியாவில் தெரியாது.
இரண்டாவது கிரகணம்
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் முதல் சூரிய கிரகணத்திற்கு 15 நாட்களுக்குப் பிறகு மே 5ஆம் தேதியன்று நிகழும். இது இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணிக்கு முடிவடையும். நாசாவின் தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆனது ஒரு பெனும்பிரல் லூனார் எக்லிப்ஸ் (Penumbral Lunar Eclipse) ஆக இருக்கும். அதாவது பூமியின் நேரடி நிழல் நிலவின் மீது விழாது. பக்க நிழல் விழுவதால் ஏற்படும் கிரகணம் இது. ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.
மூன்றாவது கிரகணம்
இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14ஆம் தேதி நிகழும். இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது. இது மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும். அதோடு இது அனுலார் சோலார் எக்லிப்ஸ் (Annular solar eclipse), அதாவது முழுமையாக சூரியன் மறையாது. நடுப்பகுதி மறைந்து சுற்றி வட்ட வளையம் மட்டும் காணப்படும்.
நான்காவது கிரகணம்
இந்தாண்டின் கடைசி கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி நிகழும். இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் அதிகாலை 1.06 மணிக்கு தொடங்கி மதியம் 2.22 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணம் மட்டும் தான் இந்தியாவில் தெரியும். இந்த சந்திர கிரகணம் பகுதி கிரகணமாக அமையும். அதாவது பாதி சந்திரன் மட்டும் மறைந்து மீளும். நான்கு கிரகணங்களில் ஒன்று தான் இந்தியாவில் தெரியும் என்றாலும் மற்ற மூன்றையும் நாசாவின் இணையதளத்தில் பார்த்து மகிழலாம். ஆனால் ஒருபோதும் வெறும் கண்ணால் பார்க்க முயலாதீர்கள்.